குப்பை கிடங்கில் சிக்கி பெண் ஊழியர் பரிதாப உயிரிழப்பு: போலீசார் விசாரணை
வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டும்போது பெண் ஊழியர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;
கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து எரிக்கப்படும். இந்நிலையில் இன்று வழக்கம் போல் குப்பைகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி பணியாளர்கள் குப்பைகளை கொட்டிய போது லாரியின் பின்புறம் அங்கு பணிபுரியும் சிவகாமி என்ற பெண் ஊழியர் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது குப்பைகள் அவர்கள் மீது கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் குப்பைகளுக்கிடையே மாட்டிய நிலையில் அவர் சத்தமிடவே சக ஊழியர்கள் குப்பைகளை அகற்றி அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் ஊழியர் நின்று கொண்டிருந்தது தெரியாமல் லாரி பணியாளர்கள் குப்பைகளை கொட்டினார்களா அல்லது தெரிந்தே கொட்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.