காவலாளியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்தார்.
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன். 55 வயதான இவர் ஆடீஸ் வீதியில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி ராமன் பணியில் இருந்த போது, எட்டிமடையை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சந்திரசேகரன் (43) என்பவர் வந்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் ராமன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் காவலாளி ராமனை தாக்கி கீழே தள்ளினார்.
பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை ஒரு வருடத்திற்கு பின்னர் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சக்திவேல் காவலாளியை கொடூரமாக கொலை செய்த சந்திரசேகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் 1000 ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.