கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
கோவை மாநகராட்சியை திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது;
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது. 3 இடங்களில் மதிமுகவும், 2 இடங்களில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. 38 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை இணைச்செயலாளர் ஷர்மிளா சந்திரசேகர், 47 வது வார்டில் பிரபாகரனும், 90 வது வார்டில் ரமேஷ் ஆகிய 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது.