திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு
9 மாத திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.;
கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, 9 மாத திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், தேர்தல் வந்தால் 2 கழகங்களும் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் குப்பை போல் வீசி விடுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.
ஊழலுக்கும் தான் தற்போது போட்டி என குறிப்பிட்ட அவர், மக்கள் சார்பு நிலையை எடுக்க கூடாது எனவும் மய்யமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். இது மக்களுக்கு சொல்லும் அறிவுரை அல்ல எனவும், தனக்கும் தனது கட்சியினருக்குமான அறிவுரையாகவே பார்க்கிறேன் எனவும் கூறிய அவர், தன்னை பாஜகவின் பி டீம் என்கிறார்கள் எனவும் மோடி வென்றாலும் தோற்றாலும் தனக்கு கவலையில்லை எனவும் அது தன் நோக்கம் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
மோடி வந்துவிடுவார் என்கிறார்கள் எனக்கூறிய அவர் பிரதமராக உள்ளவர் எப்படி கவுன்சிலராவார் எனவும் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சியினர் வென்றால் கிராம சபை கூட்டங்களை போல், நகரங்களில் வார்டு சபை, ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என உறுதிமொழி கொடுத்து தங்கள் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள் எனவும் நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார். நியாயமான தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயராவது தனது நோக்கமல்ல எனவும் தான்ன் தலைவராக மட்டுமே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னர் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்கிறது எனவும் பிற கட்சிகள் அதை பிரச்னையாக பார்க்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். கோவையில் பல இடங்களுக்கு தேர்தலுக்கு பின்னர் மநீம கட்சியினர் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் அங்கு தங்களின் கால்தடம் பதிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து நகர்புற தேர்தலில் மநீமவிற்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டிற்கும் 5 ஆண்டுகளில் ஒரு மரக்கன்று வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கி வைத்து நந்தினி என்ற கர்ப்பிணிக்கு மரக்கன்று வழங்கினார்.