திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது: முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி

உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்.;

Update: 2022-02-04 08:30 GMT

எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்த போது.

அதிமுக கோவை மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக அதிமுக வேட்பாளர்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர். பல்வேறு விதிமுறைகளை கூறி குழப்பி வருகின்றனர். கோவையில் சூழல் மாறியுள்ளது. இங்கு உள்ள காவல்துறையினரும் வேறு மாறி உள்ளனர். அதிமுக வேட்பாளர்களுடன் தேர்தல் வேலைக்கு செல்பவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வழக்குப்பதிவு செய்து மிரட்டி வருகின்றனர்.

கோவையில் உள்ள காவல் துறையினர் திமுக கட்சிக்காரர்களாகவே மாறிவிட்டனர். இது வன்மையாக கண்டிக்க கூடியது. திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் திட்டங்களை சொல்லி வாக்கு கேளுங்கள். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். கோவையை பொறுத்தளவில் என்றைக்கும் கோவை அதிமுகவின் கோட்டை. உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, கோவையில் வேகமாக பணிகள் நடைபெற்றன. தற்போது எந்த பணிகளும் நடப்பதில்லை. எங்கேயும் முறையாக குப்பை எடுக்கவில்லை. தண்ணீர் முறையாக விநியோகம் இல்லை போன்ற சூழல் உள்ளது. இந்த ஆட்சியில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வேலை செய்வதில்லை.

திமுகவினர் அதிமுகவினர் எல்லாரையும் பழி வாங்குகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தேர்தலின் போது என்னை வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பார்கள். காவல் துறையினரை வைத்து தான் திமுக தேர்தலை சந்திக்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது பத்திரிகைகள் எங்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போதும் ஆளும் கட்சியை விடுத்து எங்களையே பத்திரிக்கையாளர்கள் விமர்சிக்கின்றனர். கோவை மாவட்ட மக்கள் அமைதியானவர்கள். அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை வைத்து மிரட்டி யாரும் வெற்றி பெற முடியாது. யாரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்" என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News