கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னை கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் நேற்று திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்குவதாக கூறி, பரிசு பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை அதிமுகவினர் சிலர் சிறை பிடித்தனர். இது குறித்து தகவலறிந்த குனியமுத்தூர் காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே அங்கு திரண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் உட்பட 9 பேர் திமுகவினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால், காவல்துறையினர் கைது செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் இன்று காலை முதல் ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு திமுகவினரை கண்டித்தும் காவல் துறையினரை கண்டித்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கோவை மாவட்டம் முழுவதும் திமுகவினரின் ஏற்பாட்டின் பேரில் சென்னை கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து தேர்தல் பணிகளில் மேற்கொள்வதாகவும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் காவல் துறையினர் போட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக குறிப்பிட்டு இருந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இதில் தலையிட்டு கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடை பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு குறிப்பிட்டு இருந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது. சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவுடிகளை கொண்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினரை தாக்கி உள்ளதாக தெரிவித்தார். திமுகவினரின் இந்த செயலுக்கு கோவை மாவட்ட காவல் துறையும் துணைபோவதாக குற்றம் சாட்டிய அவர் இங்குள்ள தேர்தல் அதிகாரிகளும் அதிமுகவினரை கண்டால் பல்வேறு கேள்விகளை கேட்பதாகவும் திமுகவினரை சாதாரணமாக விட்டு விடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கல்யாணசுந்தரத்தை கைது செய்து இரவு முழுவதும் சித்திரவதை செய்த காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். காவல் ஆணையர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இது குறித்து மேலிடத்தில் கலந்தாலோசனை செய்து ஆளுநருக்கும் கடிதம் அனுப்புவோம் என தெரிவித்த அவர் தற்காலிகமாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.