சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்
சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருக்க கூடிய அரசு திராவிட மாடல் அரசு
இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கனூர், பெரிய தோட்டம் காலனி, திம்மையா நகர், வீரகேரளம், சுண்டப்பாளையம், ஓணாம்பாளையம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை மக்களுக்கும் தேவையான திட்டங்கள், கோவையின் தொழில் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக தான். இன்னும் அற்புதமான திட்டங்கள் மூலம் கோவை பல்வேறு வளர்ச்சியை காண உள்ளது திராவிட மாடல் ஆட்சியில்.
செம்மொழி மாநாட்டின்போது கோவைக்கு சர்வதேச தரத்திலான செம்மொழி பூங்கா, திட்ட சாலைகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஒன்றியத்தில் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமையும் பட்சத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து நிதிகளை பெற்று இன்னும் பல திட்டங்கள் கொண்டு வர முடியும்.
எனவே தான், மதவாத, பாசிச பாஜக அரசை அகற்றி, இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். நாளைய தினம் இஸ்லாமிய சகோதரர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர். சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருக்க கூடிய அரசு திராவிட மாடல் அரசு. மதவாத சக்தியாக பாஜகவை இந்த தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்புவோம். மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.