கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க கோரி ஆர்ப்பாட்டம்
கோவையிலிருந்து திருச்செந்தூர் வரை விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
கோவை திண்டுக்கல் இடையே பொள்ளாச்சி வழியாக கடந்த 2007ம் ஆண்டு சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதே காலகட்டத்தில், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்த கோவை ரயில் நிலையம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் கோவையிலிருந்து திருச்செந்தூர் வரை விரைவு ரயிலை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில், அந்த ரயில் பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதனால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மீண்டும் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் எனவும், மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட 8 ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, சி.பி.ஐ.எம்.எல், எஸ்.டிபி.ஐ, வணிகர் சங்கங்களின் பேரவை, ரயில்வே பயணிகள் பாதுகாப்பு குழு, உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.