காவலர் அத்துமீறல் விவகாரம்: வலுக்கும் அமைப்புகள் கோரிக்கை

கோவையில் டெலிவரி ஊழியரை தாக்கிய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-05 06:39 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

கோவை மாநகரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு பல கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டி வருகின்றனர். ஆனால் இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் பணி பாதுகாப்பு , சட்டபூர்வ உரிமைகள் எதுவும் இல்லாத நிலையில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பீளமேடு பன்மால் அருகில் போக்குவரத்து விதி மீறிய தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் தட்டிக்கேட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர், மோகனசுந்தரத்தை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தகாட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலரின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது ஆகும். போக்குவரத்து காவலரின் இந்த செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். வேலையின்மை கொடுமையால் , சட்டபூர்வ உரிமைகள் அற்ற பணியில் வேறு வழி இல்லாமல் பணியாற்றி வரும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், கண்ணியமான வாழ்க்கை வாழ அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாகும்.

இத்தகைய செயல்கள் காவல்துறையின் கண்ணியத்தையும் பொதுமக்கள் மத்தியில் குறைத்து விடும். எனவே , கோவை மாநகர காவல்துறை , மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடத்தில் இளைஞரை அவமானப்படுத்தியதற்கு ஈடாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, ஜனநாயக பூர்வ வழிமுறையில் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டுமென கோவையில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள இளைஞர்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் .

இவ்வாறு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதேபோல, பல்வேறு அமைப்பினர், அத்துமீறிய கோவை காவலருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News