கோவை குனியமுத்தூர் பகுதியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை
ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சார்பில் இசுலாமியர்கள் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இஸ்லாம் மார்க்கத்தில், ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் ஆகிய இரண்டும் முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது. ஈகைத்திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவையில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் கொண்டாடினர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திடலில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஜாக் கமிட்டியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நாளை பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை மற்றும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.