கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா ; காரணம் என்ன?

Coimbatore News- கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை கல்பனாவிடம் ராஜினாமா கடிதம் பெற்றதாக தகவல் வெளியானது.

Update: 2024-07-03 12:00 GMT

Coimbatore News- தனது மேயர் பதவியை ராஜினாமா செய்த கல்பனா ( கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today- கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் திமுக அமோக வெற்றியை பெற்றது. கோவை மாநகராட்சியில் உள்ள100 வார்டுகளில் திமுக கூட்டணி 96வார்டுகளை கைப்பற்றியது. அப்போதைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில், மணியகரான்பாளையம் பகுதியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் மேயரானார்.

முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மேயர் பதவியை கைப்பற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார். ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இது மட்டுமில்லாமல் கல்பனாவின் வீட்டிற்கு அருகே உள்ள சரண்யா என்ற பெண்ணை வீட்டை காலி செய்ய வைக்க கல்பனாவின் குடும்பத்தினர் தொல்லை அளித்தாக புகார் அளித்தார். இதனால் கட்சி தலைமை கல்பனா மீது அதிருப்தி அடைந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கட்சி தலைமை கல்பனாவிடம் ராஜினாமா கடிதம் பெற்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கல்பனா வேறு ஒருவர் மூலமாக கொடுத்து உள்ளார். மேயர் பதவியை கல்பனா ஆனந்தகுமார் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்ததாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News