21 மாதங்களுக்கு பிறகு கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்து சேவை துவக்கம்
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.;
கொரோனா நோய் தொற்று காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இரு மாநிலங்கள் இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டுமென கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடந்த 6ம் தேதி கடிதம் எழுதினார். இதனடிப்படையில் தமிழக அரசு நேற்று தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று காலை முதல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல கேரள மாநில பேருந்துகளும் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.