கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
அற்புதராஜை அடித்தும், தகாத வார்த்தைகளில் பேசியும் ஜார்ஜ் குப்புசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ். போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜ்க்கும் இடப் பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அற்புதராஜை அடித்தும், தகாத வார்த்தைகளில் பேசியும் ஜார்ஜ் குப்புசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், அற்புதராஜின் 8 வயது மகள்களை அடித்தும், தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 15ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அற்புதராஜ் மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.