கோவை மாநகராட்சியில் 118 நாட்களுக்குப் பின் கோவையில் குறைதீர் கூட்டம்..!

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

Update: 2024-06-18 13:45 GMT

குறை தீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் இருந்து வருகிறார். கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள், சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. இதன் இடையே ஜூன் 4 ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில், 118 நாளுக்குள் பிறகு மீண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயர், உடனடியாக நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News