கோவையில் 176 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்: ஆட்சியர் சமீரன்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் 14,528 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயாராக உள்ளது.
கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோவை சிங்கநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைத்த நிலையில், ஆட்சியர் சமீரன் அவற்றை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை பார்வையிட்ட அவர், தடுப்பூசி கையிருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் 14,528 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தற்போது வரை இதில் 13 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.
கோவையில் தொற்று அதிகமாக உள்ள சாலைகள் அல்லது வீடுகள் அதிகம் உள்ள 176 மைக்ரோ கண்டெயின்மெண்ட் ஜோன்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோரில் தொற்று கண்டறியப்படுவோரின் சதவீதம் 19.7 ஆக உள்ளதாகவும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எந்த சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.