கோவை: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது; அவரது உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-04-19 05:00 GMT

ஹரிஹரன்.

கோவை மாவட்டம், வால்பாறை மூடிஸ் நகரை சேர்ந்த ஹரிஹரன்(23).  கடந்த 16ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில், காட்டு மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து  வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு,  கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அறிவுறுத்தலின்படி மூளை அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருத்துவர், இருதய மருத்துவ, தீவிர சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஹரிஹரனின் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்த கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் சம்மதத்துடன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

அதன்படி ஹரிஹரனின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு தானமாகவும்,  மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட உள்ளதாகவும் ஹரிஹரனின் இரண்டு கண்களும் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கு தானமாக வழங்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்,  கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹரிஹரனின் தாயார் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததற்கு நன்றியும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா இதர மருத்துவர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக,  கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளைஞரின் உறவினர்கள், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மிகவும் தாமதமாகும் அளிக்கப்படுவதாகவும் தகுந்த முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News