பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவு.;
கடந்த மாதம் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். இதனிடையே 'யாரையும் சும்மா விடக்கூடாது' என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?, வேறு யாரேனும் தற்கொலைக்கு தூண்டுனார்களா? தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்தியிடம் கோவை மாநகர காவல் துறையினர் வழங்கினர்.