பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

முட்புதரில் மாணவியின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.;

Update: 2021-12-17 13:45 GMT

முத்துக்குமார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் நேற்று முட்புதரில் 14 வயது பள்ளி மாணவியின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மாயமான அதே பகுதியைச் சேர்ந்த மாணவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாணவியின் குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது மாணவியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீசார் தனியாக விசாரித்தனர்.

அப்போது மாணவியை 3 சவரன் நகைக்காக முத்துக்குமார் வீட்டுக்கு வரவழைத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தாயாருக்கும், முத்துக்குமாருக்கும் இடையே நகை கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நகைக்காக கொலை செய்து விட்டு வேறொருவருடன் சென்றதாக நாடகமாடி திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமார் மீது ஆதாயக்கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முத்துக்குமாரின் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, மாணவி உயிரிழந்த பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் முத்துக்குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News