கோவை கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
Coimbatore Murder-கோவையில் சக்தி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர்.;
Coimbatore Murder-கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்த சக்தி (எ) சக்தி பாண்டியன் கடந்த 12ம் தேதி இரவு நவஇந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து திடீரென அரிவாளால் சத்தியபாண்டியை சரமாரியாக வெட்டினர்.
அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சக்தி பாண்டின் சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று வீட்டிற்குள் புகுந்து வெட்டினர். இந்த சம்பவத்தில் சக்தி பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோவை ரோஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அவர்கள் சக்தி பாண்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சக்தி பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக சக்தி பாண்டி கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளியே வந்த நிலையில், முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் காஜா உசேன், சஞ்சய் குமார், ஆல்வின், சல்பல் கான் ஆகியோர் சரணடைந்தனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்த நான்கு பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் துறை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2