கோவை மாநகராட்சியில் 6 கோடி மதிப்பில் 10 புதிய சாலை பணிகள்: செந்தில் பாலாஜி
54 தார் சாலை பணிகள் 14.85 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.;
கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 6.01 கோடி மதிப்பீட்டில் 54 தார் சாலை பணிகள் 14.85 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கோவை மாநகராட்சி பகுதியில் 6 கோடி மதிப்பில் 10 சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும். கடந்த ஆட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. மக்கள் சபை நிகழ்ச்சியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்தும், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் இருப்பது குறித்தும் பொது மக்கள் மனு அளித்தனர்.
இதனையடுத்து முதல்கட்டமாக 6 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மாநகரம் முழுவதும் சாலைகள் மேம்படுத்துத்தும் பணி நடைபெறும். கோவை நகரில் மேம்பால பணிகள் தொய்வடைந்து இருப்பதற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது தான். வழக்கு தொடுத்து இருப்பவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாலப்பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்காமல் செய்யப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.செம்மொழி பூங்கா அமைப்பதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநாகராட்சியில் 100 வார்டுகளில் சாலை, குடிநீர் வசதி போன்றவை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மக்கள் பணியாற்ற கூடியவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்காரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.