பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது;

Update: 2023-06-12 12:48 GMT

பாகுபலி  யானை - கோப்புப்படம் 

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில், ஒரு ஆண் யானை மட்டும் கடந்த ஒரு ஆண்டாக மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த ஆண் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என்று பெயரிட்டு வருகின்றனர்.

இந்த யானை இதுவரை யாரையும் தொல்லை செய்வதில்லை. விவசாய நிலங்களுக்கு சென்று அதிகமான பயிர்களை சேதம் செய்வதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக இந்த யானை, நெல்லி மலையில் இருந்து வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, வனத்துறை மர டெப்போ, சிறுமுகை வனப்பகுதி ஆகிய பகுதிகளில் சுற்றி வருகிறது.

பொதுமக்கள் குடியிருப்பு பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க செல்கிறது. அதே போன்று மேட்டுப் பாளையம் வனப்பகுதி, ஊட்டி சாலையில் இந்த யானை கடந்து செல்கிறது.

அப்போது பொது மக்கள் யானையின் முன்பும், பின்னுமாக சென்று மொபைல் போனில் புகைப்படம் எடுக்கின்றனர். சிலர் சத்தமிட்டு விரட்டுகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அமைதியாக சென்று வந்த இந்த யானை, தற்போது ஆக்ரோஷமாக சென்று வருகிறது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் கூறுகையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சாலை யிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகிறது. இந்த யானை மிகவும் சாதுவாக உள்ளதால் யாரும் அதை துன்புறுத்தவும், விரட்டவும் வேண்டாம். விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் யானைக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Tags:    

Similar News