சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-15 04:00 GMT

கால்வாய் சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதமான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஆணையர், அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வில்லிவாக்கம் பகுதியில் பெருமளவு மழைநீர் தேக்கம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த வில்லிவாக்கம் குளம் புனரமைக்க மாநகராட்சியால் திட்டம் வகுக்கப்பட்டது.

36.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வில்லிவாக்கம் குளமானது சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இதில், 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னர், ஆணையர் தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகரில் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாம்பலம் கால்வாயில் 5.5 கி.மீ. நீளத்திற்கு சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் சீரமைப்பு பணிகள் 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதில், ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இப்பணிகளை வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், இந்தக் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News