சமையல் எண்ணெய், பயோ டீசலாக மாற்றும் திட்டம்:கலெக்டர் துவக்கி வைத்தார்

சமையல் எண்ணெய், ஒருமுறைக்குமேல் பயன்படுத்துவதால், வயிற்றுப்புண், சர்க்கரை நோய்,பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுகிறது.

Update: 2021-08-26 13:39 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், பயோ டீசலாக மாற்றும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது, ஹோட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள், தள்ளு வண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான சமையல் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய்யை ஒருமுறைக்கு மேல் சூடுபத்தி பயன்படுத்துவதால், அதில் நச்சு தன்மை உருவாகி, கெட்ட கொழுப்பு அமிலங்கள் 3 சதவீதம் அதிகமாகி, மொத்த போலர் சத்து கலவகைள் 25 சதவீதம் அதிகமாகி, தரம் குறைந்து உண்ண தகுதியற்ற எண்ணெய்யாக மாறிவிடுகிறது. இதனால், வயிற்றுப்புண், குடல்புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.

எனவே, சமையல் எண்ணெய் மறுசுழற்சிக்காக, அதனை பாதுகாப்பான முறையில் சேகரித்து இயற்கை எரிபொருளாக பயன்படுத்துவதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, உணவு வணிகர்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. பயன்படுத்திய எண்ணெய்யினை சேரிக்க, சென்னை கேர்வெல் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கேன்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான தரம், கருவிகள் மூலம் தினசரி பரிசோதிக்கப்பட்டு, பெறப்பட்ட எண்ணெய்க்கான தொகை அந்நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும், கொரோனா பரவி வரும் சூழலில் பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, கையுறை அணிந்தும், தனி மனித இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். மேலும், உணவு விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் அரசு வழங்கும் அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். தொடர்ந்து, சமையல் எண்ணெய்யினை சேகரிக்கும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) கே.நடராஜன், கெர்வெல் ஏஜென்சி மேலாளர் ராஜா மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News