விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வரத்து வாய்க்கால் சீரமைக்க கலெக்டர் உத்தரவு
நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் மோகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை பிள்ளையார் கோவில் அருகில் கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்யும் பணி, திரு.வி.க. சாலை குடியிருப்பு, நகர காவல் நிலையம் பகுதி, காவலர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,177 கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தவிர கடலோர பகுதிகளான மரக்காணம் தாலுகாவில் 10 நிவாரண முகாம்கள், வானூர் தாலுகாவில் 3 நிவாரண முகாம்கள் என மொத்தம் 13 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பருவமழையை கண்காணித்திட அனைத்து தாலுகாக்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள், 53 குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாகவும், தாழ்வான பகுதிகளாகவும் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட 4 ஆயிரத்து 500 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணி, வி.மருதூர், பெருமாள் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் ஓடை கரை ஓரமாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஓடையில் நீர் வரத்து அதிகமாகும் பட்சத்தில் அருகில் உள்ள நிவாரண முகாமில் சென்று தங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. குழந்தைகளை ஆற்று பகுதிகளுக்கு செல்லவிடமால் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ளவேண்டும். மணல் மூட்டைகள் பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரம்) மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் மணல் மூட்டை, சவுக்கு கட்டைகள் மற்றும் கருங்கற்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் அவசரகால தேவைக்கு பயன்படுத்தும் விதமாக 3 ஆயிரம் உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம், கனமழை அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை(நீர்வளம்) செயற்பொறியாளர் ஷோபனா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், நகராட்சி ஆணையாளர் சுரேந்தரஷா, தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu