திருத்தணியில் புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை கண்டித்து சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர்.
திருத்தணியில் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தாழவேடு சமத்துவ புரத்தில் வசித்து வந்தவர் அசோக் குமார் (வயது 38). இவர் புரட்சி பாரதம் கட்சியில் திருவலாங்காடு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அசோக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு அசோக்குமாரை தலை,உடல், தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் உடலில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்ட அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராம மக்களின் கண்ணெதிரிலே அரங்கேறிய இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் உயிரிழந்த அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து இந்தக் கொலையில் தொடர்புடைய மூன்று வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையை தடுக்க போலீசார் தவறிவிட்டதாகவும் கஞ்சாவை அருந்தி அந்த போதையில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதாகவும் கூறி அக்கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சென்னை- திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ், உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினரிடம் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதில் மாநில பொருளாளர் மாறன், இளைஞரணி தலைவர் மகா, மாவட்ட தலைவர் சதாசிவம், மாவட்ட பொருளாளர் ரகுநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu