வீட்டுமனைப் பட்டாக்களை உட்பிரிவு செய்ய வேண்டும்.. ஊத்துக்கோட்டை அருகே விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்..

வீட்டுமனைப் பட்டாக்களை உட்பிரிவு செய்ய வேண்டும்.. ஊத்துக்கோட்டை அருகே விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்..
X

அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனைப் பட்டாக்களை உட்பிரிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கொமக்கம்பேடு, இந்திரா நகர், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, வெங்கல், செப்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரசு வீட்டு மனை பட்டாகள் வழங்கி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பட்டாக்களை இன்னும் உட்பிரிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. இதனால் பட்டா வைத்திருந்தும் அந்தப் பகுதி மக்களின் விவரம் அரசின் கணக்கில் வரவில்லை. அரசு நலத்திட்டங்களுக்கு பட்டாக்களை பயன்படுத்த முடியதாத நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அரசு வழங்கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பட்டா கிடைக்காதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பழனி தலைமை வகித்தார்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி 200 மனுக்களை வட்டாட்சியர் மதியழகனிடன் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களுக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும் என்றும் தோப்பு புறம்போக்கு உட்பட்ட மற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருள், விஸ்வநாதன், மணிவண்ணன், தேவேந்திரன், கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!