முன்னறிவிப்பு இன்றி அகற்றியதால் பாதிப்பு! மாற்று இடம் வழங்குமாறு கூலி தொழிலாளி கோரிக்கை!
சேத்துப்பாக்கம் கிராமத்தில் முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்பு அகற்றியதால் கால்நடைகளுடன் கூலி தொழிலாளி அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அடுத்த சேத்துப்பாக்கம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 10-ம் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.இந்த இடம் வண்டிபாட்டை புறம்போக்கு என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,இக்கிராமத்தில் அம்பேத்கார் என்ற கூலித் தொழிலாளி சுமார் 10 மாடுகளை வளர்த்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இரண்டு தலைமுறையாக இவர்களது குடும்பத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு கொட்டகை அமைக்க பில்லர் அமைத்தார். ஆனால்,முழுமையாக அந்தக் கொட்டகையை அமைக்காமல் இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர்,வருவாய் ஆய்வாளர் மார்கரேட்,கிராம நிர்வாக அதிகாரி காயத்ரி ஆகியோர் இப்பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு மாற்று இடம் வழங்க கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது இந்தக் கொட்டகை அமைக்க நடைபெற்று வரும் பணியை பார்வையிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த ஆக்கிரமை அகற்றுமாறு வருவாய் துறையினர் வாய்மொழி உத்தரவிட்டனர். இந்நிலையில்,திடீரென நேற்று ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து வருவாய்த் துறையினர் கொட்டகை அமைக்க எழுப்பப்பட்டிருந்த பில்லர் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்து அகற்றினர்.
எனவே, முன்னறிவிப்பு இன்றி திடீரென்று வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றியதால் கால்நடைகளை வைத்துக்கொண்டு தனது குடும்பத்தினர் அவதிக்கு உள்ளாவதாக வேதனையுடன் அம்பேத்கார் தெரிவித்தார்.மேலும், இதே கிராமத்தில் தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்றில் பல ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பத்து ஆண்டு காலமாக இக்கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.
எனவே, வருவாய் துறையினர் ஏழைக்கு ஒரு நியாயமும், பணக்காரர்களான தனியார் நிறுவனத்திற்கு ஒரு நியாயமும் என்ற வகையில் செயல் படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தார். எனவே,கால்நடைகளுடன் அவதிப்பட்டு வரும் தனக்கு மாற்று இடம் வழங்குமாறு அந்த கூலித் தொழிலாளி வருவாய் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu