குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!

குடிநீர்,மின்சாரம்  வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
X

குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கக்கோரி சாலைமறியல் செய்த பொதுமக்கள்.

தாமரைப்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர், மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்தில் குடிநீர், மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சமீபத்தில் பெய்த கனமழையின் காரணத்தினால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு இல்லாத காரணத்தினால் குடி தண்ணீர் வழங்க முடியவில்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் மின்சாரம் வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அப்பகுதி மக்கள் கேட்டபோது அங்குள்ள அதிகாரிகள் தரக் குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.


இதனை அறிந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு இரு புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன், ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் மற்றும் வெங்கல் காவல்துறையினர் பொது மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

மின்சாரம் போர்க்கால அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் டேங்கர் லாரிகள் மூலம் ஊராட்சிக்கு உடனடியாக குடிநீர் சப்ளை செய்து தரப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!