புழலில் அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி

புழலில் அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி
X
புழலில் பொறியாளர் வங்கி கணக்கிலிருந்து 1.24 லட்சம் ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்.

புழலில் பொறியாளர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.24லட்சம் நூதன மோசடி. சைபர் மோசடி கும்பல் குறித்து புழல் போலீசார் விசாரணை. ஆன்லைன் மோசடி கும்பலை துப்பறிய முடியாமல் போலீஸ் திணறல்.

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த பெர்ஸி ஷெர்லின் (29) ராஜஸ்தானில் ஒன்றிய அரசின் திட்டம் ஒன்றிய தர கட்டுப்பாட்டு பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேறு வேலை தேடி பிரபல வேலைவாய்ப்பு இணையதளமான shine.comல் இலவச சேவையை தவிர்த்து பணம் செலுத்தி பிரீமியம் சேவையில் பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வேலை வாய்ப்பு இணையதள பிரதிநிதி என கூறி மோஹித் என்பவர் பெர்ஸி ஷெர்லின்-ஐ செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தற்போதைய சந்தை சூழலில் உங்களது தேவைக்கேற்ப வேலை ஏதும் இல்லை எனவும், அதனால் நீங்கள் சேவையை ரத்து செய்து விட்டு செலுத்திய பதிவு கட்டணத்தை திரும்ப பெறுமாறு கூறியுள்ளார். மீண்டும் சந்தையில் ஏற்றம் கண்டு உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு வரும் போது தொடர்பு கொள்வதாகவும் அப்போது கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து பெர்ஸி ஷெர்லின் சற்று தயங்கிய நிலையில் எதிர்முனையில் பேசிய நபர் நீங்கள் தற்போது சேவையை ரத்து செய்து உங்களது பணத்தை திரும்ப பெறாவிடில் உங்களது கணக்கு காலாவதியாகி விடும் எனவும், பலரும் இதே போல சேவையை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பு நிறுவன பிரதிநிதி என பேசியவர் அறிவுறுத்தியதன் பேரில் சேவையை ரத்து செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான கட்டணம் ரூ.10 செலுத்த முயற்சித்துள்ளார். டெபிட் கார்டில் இருந்து பணத்தை செலுத்த முற்பட்ட போது payment failed என வந்ததால், தொடர்ந்து இன்டர்நெட் பாங்கிங் வழியே மீண்டும் 10ரூபாயை செலுத்தினார். அப்போது ரூ.32999, ரூ.33128, ரூ.32929 என டெபிட் கார்டில் இருந்தும், ரூ.25000 இன்டர்நெட் பாங்கிங் சேவை வழியே என மொத்தமாக ரூ.1,24,056/- ரூபாய் பணம் பெர்ஸி ஷெர்லின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வேலை வாய்ப்பு பிரதிநிதியை தொடர்பு கொண்டு கேட்ட போது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு எனவும், மீண்டும் உங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறியுள்ளார். மறுநாள் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கியிலும், சைபர் மோசடி தொடர்பான 1930ல் புகார் அளித்தார்.

தொடர்ந்து பெர்ஸி ஷெர்லின் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து தமது பணத்தை மீட்டு தருமாறு புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் நடைபெற்று வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமலும், தொடர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளை துப்பறிய முடியாமலும் புழல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil