தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் இலவச மருத்துவ பேருந்து சேவை துவக்கம்..!

தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் இலவச மருத்துவ பேருந்து சேவை துவக்கம்..!
சேத்துப்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவைக்கான இலவச பேருந்து சேவை துவக்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே சேத்துப்பாக்கம் ஊராட்சிக்கு வேல்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் இலவச மருத்துவ சேவைக்கான பேருந்து இயக்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், சேத்துப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கான மருத்துவ சேவைக்கு திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பெரியபாளையத்தில் உள்ள வட்டார மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கும் செல்ல வேண்டும். இதற்காக இவர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அகரம் கூட்டுச்சாலை மற்றும் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வர். பின்னர்,அங்கிருந்து பேருந்து மூலம் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில்,இப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணையில் இயங்கி வரும் வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் முன் வந்தது.எனவே, நாள்தோறும் காலை 9 மணிக்கு சேத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு பாஷிகாபுரம்,தண்டுமேடு, பெருமுடிவாக்கம்,பூரிவாக்கம், நெய்வேலி,கன்னிகைப்பேர் வழியாக மஞ்சங்காரணைக்கு இந்த இலவச பேருந்து சென்றடையும்.மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும்

மதியம் 1.30 மணிக்கு மஞ்சங்காரணை மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சிக்கு வந்து சேரும். இந்நிலையில், இன்று முதல் இயக்கப்படும் இந்த பேருந்து சேவையை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சேத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,ஊராட்சிமன்ற தலைவர் முரளி தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சிமன்ற துணை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணபாபு கொடியசைத்து இவ்வழித்தடத்தில் இலவச பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஆர்.எம்.ஓ டாக்டர் அழகவேல், துணை கண்காணிப்பாளர் டாக்டர் சதீஷ்தேவ், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,மகளிர் உதவி குழுவினர்,கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரையும் செவிலியர் சந்தியா வரவேற்றார்.முடிவில், மார்க்கெட்டிங் மேனேஜர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

Tags

Next Story