ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்..!
ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் அதிகாரி இல்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைத்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்,வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய முயல்வதாக கூறி மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்கோட்டை வட்டக் குழு சார்பில் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே இருந்து ஊத்துக்கோட்டை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர்,உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அருகே கண்டன உரையாற்றினர்.
இப்போராட்டத்துக்கு ஊத்துக்கோட்டை வட்ட குழு தலைவர் பி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.இதில், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் பி.ரவி,மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன்,எம்.திருப்பதி, பி.முனுசாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதன் பின்னர்,உதவி செயற்பொறியாளரிடம் மனு வழங்க அலுவலகத்திற்குள் சென்றனர்.
ஆனால்,மனுவை பெற்றுக்கொள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நீண்ட நேரமாக காத்திருந்தும் வரவில்லை.இதனால் மனு கொடுக்க அலுவலகத்துக்குள் வந்திருந்த தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் காத்திருந்தனர். மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என தகவல் கூறியும் அதிகாரிகள் இல்லையே, என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அப்பொழுது ஒரு ஊழியர் நீங்கள், ஏதோ? வெளியில் நின்று கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டு உதவி செயற்பொறியாளர் வெளியே சென்று விட்டார் என கேலியும்,கிண்டலுமாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,இதுபோன்று உதாசீனமான பேசினால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். இதனால் பாதுகாப்புக்கு வந்திருந்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீசார் மின்வாரிய அலுவலக ஊழியர்களையும்,தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தினர்.
இதன் பின்னர்,உதவி பொறியாளர் செந்தில்குமார் என்பவர் தன்னிடம் கோரிக்கை மனுவை வழங்குமாறு வந்து கூறினார்.இதன் பின்னர், அவரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தின்படி மனுவை வழங்கிவிட்டு அனைவரும் அமைதியாக சென்றனர். இப்பிரச்சனையால் சுமார் ஒரு மணி நேரம் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu