பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!
பெரியபாளையத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி.
பெரியபாளையம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பெரிய விபத்து ஏற்படும் முன்னர் அந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரியபாளையம் பேருந்து நிலையத்தின் பின்புறம் 1975-ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து பெரியபாளையம் பஜார், பகுதி முழுவதும் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு காலை மாலை என இரண்டு வேளை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
50 ஆண்டுகள் கடந்த இந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியின் தூண்கள் பலவீனமடைந்து விரிசல்கள் ஏற்பட்டு அதில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து உள்ளே இருக்கின்ற கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகிறது. புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ள பெரியபாளையத்திற்கு ஆடி மாதம் மற்றும் வெறும் நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் இந்த பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி உள்ளதால் இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.
இந்த ஆபத்தான தொட்டில் மூலமாக ஆபத்து ஏற்படும் முன்பு இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி அகற்றி புதிய தொட்டியை கட்டித் தர வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், வியாபாரிகளும் பலமுறை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும், ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து இப்பகுதி வாசிகள் சிலர் தெரிவிக்கையில் இங்குள்ள குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் மேலாகவே ஆகிறது. பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது இந்த தொட்டி தற்போது அச்சுறுத்தும் வகையில் அதன் தூண்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது என்றும் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு பழுது பார்த்த நிலையில். மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே, இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu