சாலை ஓரத்தில் கழிவுநீர் கொட்டி செல்வதால் துர்நாற்றம் : நோய் பரவும் அபாயம்..!
கழிவுநீர் கொண்டுவரும் ட்ராக்டர்
சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் கொண்டுவரப்படும் கழிவுநீரைக் கொட்டிச் செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சியில் சுமார் 12.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியை ஒட்டி சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் ஓரத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டர் மற்றும் லாரிகளில் கழிவுநீரைக் கொண்டு வந்து கொட்டப்படுவதால் மக்கள் சொல்லமுடியாத துயருக்கு ஆளாகி உள்ளனர். அந்த அளவுக்கு மோசமான துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்களிலிருந்து லாரி மற்றும் டிராக்டர்களில் கழிவுநீரை ஏற்றி கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை கொட்டிச் செல்வதால் கண் எரிச்சல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளினால் இங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சோழவரம் ஏரியிலிருந்து கால்வாய் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு தண்ணீர் செல்கிறது.இதில் கழிவுநீர் கலப்பதால் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கழிவுநீர் கலந்து விஷத்தன்மையாக மாறி விடுவதாகவும் அந்த தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல், குமட்டல், தலைவலி உள்ளிட்ட நோய்கள் தங்களையும் தங்களது குழந்தைகளை தாக்குவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கழிவுநீர் கால்வாயில் கலந்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நோய்தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
எனவே இனியும் மெத்தனம் காட்டாமல் புறவழிச்சாலையின் இருபுறமும் கழிவுநீரை கொண்டு வந்து கொட்டுபவர்கள்மீது காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். கழிவுநீர் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சோழவரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu