ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி.. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி..
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, கொலையாளிக்கு உதவியாதாக பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை சம்பவத்துக்கும் கைதானவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், கைதானவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்தி சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி காட்டி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறையில் இருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று இருவரையும் வரவேற்றனர். அப்போது உடன் வந்தவர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். இலங்கை தமிழர்கள் என்பதால் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு போலீஸார் அழைத்து சென்றனர். சிறை வாயிலில் வாகனம் கடந்து செல்லும் போது பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவரும் சிறையில் இருந்து வெளியில் வந்தது மகிழ்ச்சி எனவும், ராபர்ட் பயாஸுக்கு உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவரை முகாமுக்கு அனுப்பி உள்ளனர், அவர் உடல்நிலையை கவனிக்க வேண்டும். திருச்சியில் உள்ளது சிறப்பு முகாம் என்பதால் தகுந்த ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் காரணங்களுக்காக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க இந்த சட்டம் பயன்பட வேண்டும். ஒவ்வொருத்தராக சிறையில் இருந்து வெளியே வந்து அவர்களின் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu