தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!
X
திருக்கண்டலம் பகுதியில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளி தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியபாளையம் அருகே இளநீர் பறித்த இளைஞர் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சின்னராசு ( வயது 25). என்ற இளைஞர் கடந்த 5மாதங்களாக திருக்கண்டலம் பகுதியில் இயங்கி வரும் செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அருகில் உள்ள தென்னைமரத்தில் ஏறி சின்னராசு இளநீர் பறித்தார்.அப்போது சின்னராசு கால் வழுக்கி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சின்னராசுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னராசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சமூக ஆர்வலர்களும் சிலர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சுமார் ஐந்து மாதத்திற்கு மேலாகவே தங்கி இருந்து வேலை முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் குடிநீர், கழிவறை, மருத்துவம், மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.

தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் எத்தனை பேர் தங்கி வேலை பார்க்கின்றனர் என முறையாக ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கெடுப்பு எடுத்து அவர்களுக்கு அனைத்து வசதிகள் அப்பகுதியில் உள்ளதா என ஆய்வு செய்து பின்னர் செங்கல் தொழிற்சாலை இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!