ஆவடி காவல் நிலையத்தில் மழை நீர் புகுந்தது..!
காவல் நிலையத்திற்குள் மழை நீர்.
ஆவடி காவல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் காவலர்கள் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
.சமீபத்தில் வடக்கு கிழக்கு பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளிலும் தெருக்களிலும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த மழை நீர் தேங்கி நின்ற காரணத்தினால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் கனமழை காரணமான ஆவடி காவல்நிலையத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் காவல்நிலையத்தை அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவலர்கள் தங்ளது பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் முழங்கால் அளவிற்கு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் விசாரணையை மேற்கொள்ள முடியாமல் காவல் நிலைய பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. வரவேற்பு அறை, கைதிகள் சிறை என அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்து கால் முட்டி வரை தேங்கி நிற்கிறது. இதனால் ஆவடி காவல் நிலையத்தில் பணிகள் முடங்கி இருக்கின்றன. எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டாரின் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்படாத வகையில் மின்சாரமானது துண்டிக்கப்பட்டுள்ளது.காவல் நிலைய கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும் மழையில் நனையாத வகையில் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.காவல் நிலையத்தில் உள்ள வாகனங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மழைக்கும் இதே நிலை நீடிப்பதாக காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மழை நீர் புகாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu