கொல்லிமலை ஊர்முடிப்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு போராட்டம்
கொல்லிமலையில் உள்ள ஊர்முடிப்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு, மலைவாழ்மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லிமலை சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு, மலைவாழ் மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராம மலைவாழ் மக்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ், ஒன்றிய தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி பேராட்டத்தை துவக்கி வைத்தார் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் போராட்டத்தை விளக்கி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, சேலூர் நாடு பஞ்சாயத்து, ஊர்முடிபட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு முக்கிய சாலையாக இருப்பது வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை செல்லும் கிராம சாலையாகும். இது செம்மேடு முதல் வெண்கலப்பாடி வரை செல்லக்கூடிய மெயின் ரோட்டில் இணைகிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை மிகவும் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட இந்த கிராமத்திற்கு வர முடியாமல், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் பலமுறை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த ரோட்டை உடனடியாக செப்பனிடக் கோரி, சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் பாத்திரங்கள், விறகு, பாய் படுக்கையுடன் சமைத்து சாப்பிட்டு, தார் சாலை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பிடிஓ (கிராம ஊராட்சி) தனசேகரன், போலீஸ் எஸ்.ஐ. சுப்பிரமணி, ஏட்டு கணேசன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராமத்திற்கு உடனடியாக தார் சாலை அமைத்து தர அரசிற்கு பரிந்துரை அனுப்புவதாகவும், விரைவில் தார் சாலை அமைத்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மலைவாழ் மக்கள் கலைந்துசென்றனர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விரைவில் சாலை அமைக்காவிட்டால் கொல்லிமலையின் பிரதான நுழைவாயிலான சோளக்காட்டில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மணி பழனி கவுண்டர், பூசாரி ரவி , சுரேஷ், ஆண்டி, சந்திரன், கஜேந்திரன், பாலசுப்பிரமணி, பிரதீப், மதியழகன், பாக்கியராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu