நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை: உறவினர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை: உறவினர் கைது
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த வழக்கில், அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (60). விவசாயி. இவர் எண்ணெய் வியாபாரமும் செய்து வந்தார். முருகேசனுக்கும், அவரது சகோதரர் பாதருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை முருகேசன் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற சகோதரர் பாதரின் மகன் தினேஷ்குமார் (31), அவரிடம் பொதுவில் உள்ள நிலத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். தினேஷ்குமாருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் விஜயபிரகாஷ், செந்தில்குமார் ஆகியோரும் பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது உறவினர்களும் முருகேசனை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில், தினேஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான அவர்களது உறவினர்கள் விஜயபிரகாஷ், செந்தில்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, கொலையான விவசாயி முருகேசனின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொலையாளிகளை உடனே கைது செயய் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா..!