தார்சாலை அமைத்து தரக்கோரி கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு

தார்சாலை அமைத்து தரக்கோரி கால்நடைகளுடன்  சாலை மறியல் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு
X

கோம்பை கிராமத்திற்கு தார்சாலை அமைத்து தரக்கோரி நாமக்கல் - துறையூர் மெயின் ரோட்டில், எருமப்பட்டி கைகாட்டியில் கிராம மக்கள், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தார்சாலை அமைத்து தரக்கோரி கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல் :

நாமக்கல் அருகே, தார்சாலை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள், கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை அடிவாரத்தில், கோம்பை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக 5 கி.மீ., தூரம் உள்ள எருமப்பட்டி கைகாட்டி பகுதிக்கு வந்து செல்கின்றனர். எனினும் போதிய சாலை வசதியில்லாமல், மண் சாலையாக இருப்பதால் நடந்து மற்றும் வாகனங்களில் வரும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக மாறுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எருமப்பட்டி கைகாட்டி முதல் கோம்பை வரை தார்சாலை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள் இன்று காலை எருமப்பட்டி கைகாட்டியில், நாமக்கல் - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில், கறவை மாடுகளுடன் வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் தேங்கி நின்றன.

தகவல் அறிந்து, விரைந்து வந்த எருமப்பட்டி போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் பிரச்சினையை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் நாமக்கல் - துறையூர் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!