நாமக்கல் அருகே மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது: கார் பறிமுதல்
கோப்பு படம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் சிலர், அருகில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்களை கடத்தி வருகின்றனர். சிலர் அதிகப்படியான மதுபாட்டில்களை வாங்கி வந்து, நாமக்கல் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க மாவட்ட எல்லையில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் மதுபாட்டில்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரமத்திவேலூர் போலீசார், மோகனூர் வழியாக திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் வழியில், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 67 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில், அவர்கள் கபிலர்மலை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் பெரியசாமி ( 24), அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் மோகன் என்பது தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி, அதனை நாமக்கல்லில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 67 மதுபாட்டில்கள் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காட்டுப்புத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபானங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பட்லூர் பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் ரவிக்குமார் (28), பழனிசாமி மகன் நல்லமுத்து (28) ஆகியோர் என்பதும், கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக, 35 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu