Nainamalai Varadaraja Perumal Temple-வேண்டும் வரம் அருளும் நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள்..!
நைனாமலைக் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள்.
Nainamalai Varadaraja Perumal Temple
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி விரதத்துக்கு பெயர்பெற்ற கோயில் நைனாமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நைனாமலைக்கு வந்த பெருமாளை தரிசனம் செய்கின்றனர்.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து சனிக்கிழமையன்று மலையேறி, பெருமாளை தரிசித்து வீட்டிற்குச் சென்று காய்கறி படையல் செய்து வழிபட்டு விரதம் முடிக்கும் முறை, காலம் காலமாக பின்பற்ற பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெருமாள் கோவில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா காளப்பநாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் கோவில்தான் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில். நாமக்கல் மாவட்டத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழ்வதாலும், நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும், நைனா என்றால் தந்தை என்று தெலுங்கில் பொருள்படுகிறது.
Nainamalai Varadaraja Perumal Temple
கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள். மிகத் தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, ஸ்ரீ வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், கன்மநையின மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதால் , இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. பல யுகங்களாக ரிஷிகள் இங்கே இருந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Nainamalai Varadaraja Perumal Temple
எனவே இந்த கோயில் நைனாச்சலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் திருமலை நாயக்கரின் குருநாதர் நினி ரிஷி இங்கு தவம் செய்துள்ளார். ஒவ்வொரு 12 ஆண்டுகளிலும், சுவாமி இந்திரியை வந்து வழிபாடு செய்தார். அழகிய செதுக்கப்பட்ட தூண்களில் ஒன்றில் அதற்கான ஒரு சிற்பமும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிக பழமையான கோவில்களில் நைனாமலை ஸ்ரீ வரதராஜபெருமாள் சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த ஆலயம் சேலம் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3,000 மீட்டர் ஆகும். மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகளில் ஏறி இம்மலைக் கோவிலை அடைய முடியும். மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை ஏறி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மலை இறங்கிச் சென்றாலே நமது மனதுக்கு மிகவும் உற்சாகம் பிறக்கும்.
Nainamalai Varadaraja Perumal Temple
இக்கோயில் நாமக்கல் . சேந்தமங்கலம் பகுதியை ஆண்ட ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. மலை மீது திருத்தலம் நான்கு யுகமாகக் கொண்டு இந்திரஜாலம், பத்மஜாலம், யாதவா ஜாலம், நைனா ஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கின்றது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. இவற்றில் காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்தும், தற்போது கடும் வறட்சியிலும் என்றென்றும் வற்றாத 3 தீர்த்தங்கள் இன்றளவும் உள்ளன.
மலையின் மீது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் குவலயவள்ளி அம்மனுடன் காட்சியளிக்கிறார். மலை மீது மகா மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணை தாழ் கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதார சிலைகளும் உள்ளன.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆனி முதல் தேதி முதல் ஆடி 30ந் தேதி வரை சூரிய உதயத்தின்போது, சூரிய ஒளி சுவாமி மூலவர் மீது விழுவது தனிச்சிறப்பாகும்.
Nainamalai Varadaraja Perumal Temple
இங்கு புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்கள் உள்ளிட்ட கொங்கு நாட்டில் உள்ள ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து மலை ஏறி சுவாமியை தரிசிப்பது சிறப்பாகும். குறிப்பாக புரட்டாசி 3வது சனிக்கிழமை அன்று பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நைனாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும் மலை மீது ஏறிச்சென்று தரிசனம் செய்ய முடியாமல் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்த பிறகு, கீழ் இருந்தே மலையை நோக்கி நின்று ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து, சேந்தமங்கலம் ரோட்டில் சென்றால் 4 கி.மீ மீட்டர் தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அருள்மிகு நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நாமக்கல் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. கோயிலில் 3,700 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளதால் வெய்யில் நேரத்தல் கடும் வெப்பம் இருக்கும்.
எனவே கோடை காலங்களில் அதிகாலையில் மலைக்குச்சென்று திரும்புவது சிறப்பாகும். தற்போது நைனாமலைக்கு, மலைப்பதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவில் தினசரி காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் உற்சவ நாட்களில் முழு நேரமும் கோயில் நடை திறந்திருக்கும். புரட்டாசி மாதத்தில் நைனாலை ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu