மோகனூர் மேஸ்திரி கொலை வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது

மோகனூர் மேஸ்திரி கொலை வழக்கில்  மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
X

மோகனூரில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து, அவரது கணவரை கொலை செய்த நந்திகேசவன் மற்றும் அவரது நண்பர் தனுஷ்.

மோகனூர் மேஸ்திரி கொலை வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்:

மோகனூர் அருகே, கணவனை கொலை செய்ய மனைவிக்கு உடந்தையாக, இருந்த கள்ளக்காதலனையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37), கட்டிட மேஸ்திரி. இவரும் பிரேமா (35) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு, அனிஷ், ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரேமா மோகனூரில் உள்ள தனியார் பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அங்கு வேலை செய்த திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டம், விளக்கல்நத்தத்தை சேர்ந்த நந்திகேசவன் (25), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறி உள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த பேக்கரி உரிமையாளர் இரண்டு பேரையும் வேலைக்கு வராமல் நிறுத்திவிட்டார். இந்த தகவல் தெரிந்த பெரியசாமி தனது மனைவி பிரேமாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தனிமையில் தவித்த பிரேமா கணவனை ஒழித்துக் கட்ட முடிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.

கடந்த 23 ந்தேதி அதிகாலை 2 மணியளவில், காதுவலி என. கூறி மோட்டார் சைக்கிளில் கணவனுடன் மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். செல்லிபாளையம் அருகிலுள்ள ஒரு திருப்பத்தில்,தயார் நிலையில் இருந்த கள்ளக்காதலன், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, பெரியசாமியை கீழே தள்ளி, அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன் இறந்ததை உறுதி செய்து கொண்ட பிரேமா கள்ளக்காதலனை அனுப்பி வைத்துவிட்டு தனது உறவினருக்கு போன் செய்து சாலை விபத்தில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் ஒன்றில் அவரது உடலை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தனது கணவர் இறந்துவிட்டதாக பிரேமா மோகனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் இது குறித்து, வழக்குப் பதிவு செய்து, பெரியசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேமாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், பிரேமாவின் செல் போன் நெம்பரை, ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, பிரேமா மோகனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்துவந்த, நந்திகேசவன் (25) என்பவருடன் கடந்த 4 மாதமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதும், அதை கண்டித்த கணவனை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் வாழலாம் என முடிவு செய்து, கொலை செய்ததையும் பிரேமா ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் சேலம் மகளிர் கிளை சிறையில், அடைக்கப்பட்டார்.

தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலன் நந்திகேசவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா, குன்னத்தூர், பகுதியை சேர்ந்த தனுஷ் (21) என்பவரையும் கைது செய்து, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!