நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!

நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!

மகாருத்ரேஸ்வரர் (கோப்பு படம்)

பிரம்ம தேவனுக்கு படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 ருத்திரர்கள் ஏகாதச ருத்திரர்கள் எனப்படுவர்

கோயில் நகரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இதில் பரிகார தலங்களும் திவ்ய தேசங்களும் அமைந்துள்ளதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான வருகை புரிந்து வருகின்றனர்.

அவ்வகையில் , காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் மாதனம்பாளையத் தெருவில், பழமையான அருள்மிகு மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிப்புராணத்தில் பாடப்பெற்ற திருத்தலமாக இது உள்ளது. இத்திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


ஆதியில் பிரமதேவனுக்குப் படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட பதினொரு ருத்ரர்களும், ஏகாதச ருத்ரர்கள் எனப்படுவர்.

மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சவும்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன் ஆகியவை ஏகாதச ருத்ரர்களின் பெயர்களாகும்.

புராண காலத்தில் இவர்கள் தனித்தனியே காஞ்சியில் இலிங்கம் நிறுவி வழிபட்டதாக காஞ்சிப்புராணம் எனும் நூல் தெரிவிக்கின்றது.

இவர்கள் வழிபட்ட திருக்கோயில்கள் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஶ்ரீமகாருத்ரேஸ்வரர் திருகோயில், ஶ்ரீஆனந்த ருத்ரேஸ்வரர் திருக்கோயில், ஶ்ரீஅனாதி ருத்ரேஸ்வரர் திருக்கோயில், ஶ்ரீருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் என்று நான்கு திருக்கோயில்கள் மட்டுமே தற்போது உள்ளன. ருத்ரர்கள் வழிபட்ட ஏனைய திருக்கோயில்கள் தற்போது அறிய இயலவில்லை.

இவற்றுள் மாதனம்பாளையம் தெருவில் உள்ள ஶ்ரீமகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் முதன்மையானதாகும்.

இந்த திருக்கோயிலில் சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து சந்நிதிகளுக்கும் புதியதாக விமானங்கள் அமைக்கப்பட்டு, புதியதாக இராஜகோபுரமும் கட்டப்பட்டு, பிரகாரங்களில் கருங்கல் தரைதளம் அமைத்து புதியதாக உற்சவ விக்கிரகங்களும் செய்யப்பட்டு பல இலட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அதே தெருவில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் முதலில் மாணிக்க விநாயகர் திருக்கோயிலுக்கும் , இதன் தொடர்ச்சியாக ஶ்ரீமகாருத்ரேஸ்வரர் திருக்கோயிலுக்கும் வேத மந்திரங்கள், மேள தளாங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் மதுரை ஆதினம் ஶ்ரீலஶ்ரீ ஹரிஹர ஞானதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் திமுக நகர செயலாளர் சிவிஎம்அ.சேகரன் மற்றும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஶ்ரீமகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஶ்ரீமாணிக்க விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு திருக்கோயிகளிலும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மாதனம்பாளையத் தெரு முழுவதும் வண்ணமின் விளக்குகளாலும் பூமாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இன்று மாலையில் புதியதாக செய்யப்பட்ட ஶ்ரீ காமாட்சி அம்பாள் சமேத மகாருத்ரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story