அந்தியூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா துவக்கம் : பள்ளி மாணவர்கள் அசத்தல்..!
கலைத்திருவிழாவில் முதலமைச்சரின் திருவுருவப் படத்தை வரைந்த மாணவனை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பாராட்டினார்.
அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவிப்பின்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்று முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்ட அளவில் 26.10.2023 முதல் 28.10.2023 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளானது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளி வியாழக்கிழமை (இன்று) துவங்கப்பட்டது. துவக்க விழாவினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் விளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களை பாராட்டினார்.
அதில் குறிப்பாக, கருங்கல்பாளையம் பள்ளி மாணவன் அஜய் தமிழ்நாடு முதலமைச்சரின் திருவுருவப்படத்தை வரைந்ததை பாராட்டினார். இக்கலைத் திருவிழாவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நடுநிலை,உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் சுமார் 1,568 பேர் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகம், கிராமிய நடனம், செவ்வியல் நடனம், கருவி இசை, கும்மி நடனம், ஓவியம், அழகு கையெழுத்து, திருக்குறள் ஒப்புவித்தல், செதுக்கு சிற்பம் போன்ற 26 வகையான போட்டிகளில் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பவானி, தலைமையாசிரியர் சேகர், ஈரோடு மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், அந்தியூர் வட்டாரக்கல்வி அலுவலர் மாதேஷா மற்றும் அபிராமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும் 14 ஒன்றியங்களைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைச்சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu