முதல்வர் ஸ்டாலினுக்கு விளம்பர மேனியா நோய்: அண்ணாமலை பேச்சு
அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக அரசு அறிவித்துள்ள மின்சாரக் கட்டணம், சொத்துவரி, பால்விலை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கண்டித்து அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பொருளில் தொடங்கி, சொத்துவரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் விலை உயர்வு என எல்லா கட்டணமும் உயர்ந்து விட்டது. பிரதமர் விலையைக் குறைத்தும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதனைத் தான், ஒவ்வொரு அமைச்சரும் டார்கெட் வைத்து பணிபுரிவதாக முதல்வர் கூறுகிறார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. தமிழக முதல்வருக்கு விளம்பர மேனியா நோய் வந்துள்ளது. அவர்கள் குடும்பமே கதை, திரைக்கதை வசனம் எழுதியவர்கள் என்பதால், மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும், முதல்வர் மகன் உதயநிதியின் நிறுவனம் பிடுங்கி வெளியிடுகிறது. சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகன் வெளியிட்டுள்ள 'லவ் டுடே' படத்தை மனைவியுடன் பார்க்கிறார். அந்த படத்தைப் பார்த்துவிட்டு, நமது செல்போன்களை மாற்றிக் கொள்ளலாமா என முதல்வரின் மனைவி கேட்டதாகவும், அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்ததாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். மனைவியிடம் செல்போனை நம்பி கொடுக்க முடியாதவரிடம், தமிழகத்தை நம்பி கொடுத்ததன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வயல்வெளியில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிட்ட ஸ்டாலின், தற்போது வயல்வெளியில் சிவப்புக் கம்பளம் விரித்து மழை சேதத்தைப் பார்வையிடுகிறார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி விட்டு, பால் விற்பனை விலையை 12 என உயர்த்துவதுதான் திராவிட மாடல். குஜராத்தில் செயல்படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருவாயில் 82 சதவீதத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், ஆவின் நிறுவனம் ஊழல் காரணமாக நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பாலினைக் கொள்முதல் செய்த ஆவின் தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், அமைச்சர் நாசர், நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார். திவால் ஆன ஆவின் நிறுவனத்தை, கமிஷன், கொள்ளைக்காக நடத்துகின்றனர்.
குஜராத் அமுல் பால் நிறுவனத்திற்கு எங்கள் செலவில், அமைச்சர்களை அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம். அங்கு சென்று எப்படி அமுல் லாபகரமாக இயங்குகிறது என பார்த்து தெரிந்து கொள்ளட்டும். டிலைட் எனும் வகை பாலுக்கு மட்டும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 6 வண்ணங்களில் விற்பனையாகும் பாலுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் ஆரஞ்ச் கலர் பால் லிட்டர் ரூ 46-க்கு விற்கும்போது, ஆவின் அதே வகை பாலை ரூ 60-க்கு விற்கிறது. பால் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது என்றதும், 'அதனை காய்ச்சி உருக்கி விடுங்கள். பொங்கலுக்க்கு நெய்யாக விற்று விடலாம்' என அமைச்சர் சொல்கிறார். இதுபோன்ற கோமாளித்தனமான அரசை பார்த்ததில்லை.
கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கேஜிப் 1 என்றால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கேஜிப் 2 போல் அதைவிட பயங்கரமாக இருக்கும். மற்றொரு அமைச்சரான சேகர்பாபு, சென்னை மேயர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது, 'அடிச்சுவிடு, அடிச்சு விடு' என்று சொல்கிறார். இவர்களை யார் கேட்பார்கள் என நினைத்துக் கொள்கின்றனர் இந்த வெட்கக்கெடான செயலை பார்க்க வேண்டும் என்பது தலைவிதி. வாய்கோளாறு, நிர்வாகக் கோளாறுடன், ஊழலின் இலக்கணமாக விளங்கும் அமைச்சர்களுக்கு முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் கொடுக்கிறார். இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் பார்த்ததில்லை.
சென்னையில் நீர் தேங்காத இடமாகப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.தமிழகத்திற்கு வரும்போது தேசியம் கலந்த ஆன்மிக உணர்வு வருவதாகவும், கொட்டும் மழையில் கைக்குழந்தையுடன் சகோதரிகள் வரவேற்பு கொடுத்தது கண்ணீரை வரவழைத்ததாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரண்டு கிலோ மீட்டர் தூரம், காரில் நின்றவாறு பொதுமக்களின் வரவேற்பை அவர் ஏற்றார். நமது முதல்வர், பிரதமர் மோடி போல் ஆக ஆசைப்படுகிறார். அப்படி அவர் பிரதமர் போல் ஆக வேண்டுமென்றால், 21 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க கூடாது. எந்த காரியத்திலும், குடும்ப உறுப்பினர்களை பக்கத்தில் விடக் கூடாது. கை சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக முதல்வரைச் சுற்றி, 'டார்கெட்' அமைச்சர்கள் தான் உள்ளனர். எனவே கனவில் கூட மோடியின் நகத்திற்கு கூட தமிழக முதல்வர் ஈடாக முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu