பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா
யானை பொங்கல் விழாவில் யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி இந்தாண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் யானைகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் எனவும் இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கு ஒரே இடத்தில் சின்னத்தம்பி, அரிசி ராஜா என்கிற முத்து உட்பட 26 க்கும் மேற்பட்ட யானைகளை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும் கூறிய அவர்கள், அந்த வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள வனத்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu