ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
கோவை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இந்தக் கோவில் இருந்து வருகிறது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணமாகவும், நகையாகவும் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மாசாணியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி, மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வருவாயை கோவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொன் இன பொருட்கள் உருக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி துரைசாமி ராஜு மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த உருக்கும் பணிகள் காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu