ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

கோவை அருகே விவசாயிகள் மறியல்  போராட்டம் நடத்தினர்.

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விவசாயிகளிடம் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

வெளி நாடுகளில் இருந்து 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊக்கப்படுத்தாமல் அரசு இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.

இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. நியாய விலை கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 10 ரூபாயாக குறைந்து விட்டது. பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை தமிழக அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story