கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக போராட்டம்

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக போராட்டம்
X

அதிமுகவினர்  சாலை மறியல் போராட்டம் நடத்திய காட்சி.

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மறியலில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இன்று பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் பகுதியிலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சூலூர் பகுதியிலும் என புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதி மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜகவினருக்கு பிற்பகலிலும், அதிமுகவினருக்கு மாலையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனம் வந்தது. மாநில தலைவர் அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில் , பிரச்சார வாகனம் மட்டும் தனியாக வந்தது. அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த நிலையில் பா.ஜ.க பிரச்சார வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஒரு இடத்தில் அதிமுகவினரின் வாகனங்களை ஓவர் டேக் செய்து பா.ஜ.கவின் பிரச்சார வாகனம் செல்ல முயன்றது. அப்போது லேசாக அதிமுகவினரின் வாகனத்தில் உரசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் , பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்