கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சேகர்

போலீஸ் எனக்கூறி பணம் கொடுத்தால் மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள சென்னப்ப செட்டி புதூரில் உள்ள உழவன் ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இதேபோல காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை துரைசாமி என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் உழவன் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மூர்த்தி மற்றும் கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமியிடம், ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் என்று கூறி பேசியுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் பணம் ஜி பே மூலம் கொடுத்தால், உணவகங்களில் மது விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமி, அந்த நபரை நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் அந்த நபர் காடுவெட்டி பாளையம் நான்கு ரோடு சந்திப்புக்கு வரச் சொல்லியுள்ளார். இதன் பேரில் அந்த பகுதிக்கு வந்த கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமியை, அந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த துரைசாமி அந்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு, கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் அன்னூர் அருகே உள்ள நீல கவுண்டன் புதூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சேகர் (31) என்பதும், போலீஸ் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் சேகர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!